செய்திகள்
கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வெளியே நின்றபடி தரிசனம் செய்த பக்தர்கள்.

களையிழந்த ஓணம் கொண்டாட்டம்: ஐயப்பன் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம்

Published On 2021-08-21 12:44 IST   |   Update On 2021-08-21 12:44:00 IST
ஓணம் பண்டிகை சமயத்தில் கோவை மலையாளி சமாஜம் சார்பில், பூக்கோலப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
கோவை

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய இடைங்களில் ஆயிரக்கணக்கான கேரள மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை அவர்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக உற்சாகமின்றி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

முன்னதாக பாதுகாப்பான முறையில் அரசின் வழிகாட்டு நெறிமுறையின்படி ஓணம் பண்டிகையை கொண்டாட கேரள மக்கள் முடிவு செய்திருந்தனர்.

இதையடுத்து கோவை, பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் அஸ்தம் நட்சத்திரம் தினம் தொடங்கி 10 நாட்கள் ஓணத்தை கொண்டாடினர். 10-வது நாளான இன்று மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு, கேரள மக்கள் மகிழ்ந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக வழக்கமான உற்சாகமின்றியும், உறவினர்களை விருந்துக்கு அழைக்க முடியாமலும், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமலும் ஓணம் பண்டிகையை இன்று எளிமையாக கொண்டாடியதாக கோவையில் வசிக்கும் கேரள மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அதேபோல ஓணம் பண்டிகை சமயத்தில் கோவை மலையாளி சமாஜம் சார்பில், பூக்கோலப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக போட்டிகள் நடத்தப்படவில்லை என கோவை மலையாள சமாஜம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஓணம் பண்டிகையை ஒட்டி கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. சுவாமி முன்பு 40 டன் பூக்களால் அத்தப்பூ கோலமிடப்பட்டு இருந்தது.

கொரோனா நடத்தை விதிமுறைகள் காரணமாக இன்று கோவிலில் பக்தர்கள் யாரும் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கேரள மக்கள் வழக்கம்போல் ஐயப்பன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் வாசலில் நின்றபடியே ஐயப்பனை தரிசித்து விட்டுச் சென்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். ஓணத்தை முன்னிட்டு இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்ப்பட்டு உள்ளது.

Similar News