செய்திகள்

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Published On 2019-01-21 05:10 GMT   |   Update On 2019-01-21 05:10 GMT
வடலூரில் சத்திய ஞானசபையில் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் ஏழு திரைகளை விலக்கி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள் இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்த்தும் விதமாக கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். அதில் கடந்த 1872-ம் ஆண்டு சன்மார்க்க கொடியேற்றி முதல் ஜோதி தரிசனத்தை நிகழ்த்தினார்.

அன்று முதல் மாதம் தோறும் பூச நட்சத்திர தினத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டு வருகிறது. அதே போல ஆண்டுதோறும் தைமாத பூச நட்சத்திரத்தன்று மட்டும் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.

இந்தஆண்டு 148-வது ஜோதி தரிசன விழா சத்திய ஞானசபையில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணிக்கு ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி‘ என்கிற வள்ளலாரின் பாடலை அங்கு கூடியிருந்தவர்கள் பாடினர்.

இதேபோல் வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சத்தியஞானசபையில் இரவு 7 மணிக்கு திருஅருட்பா கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் ஏழு திரைகளை விலக்கி இன்று காலை 6 மணி, 10 மணிக்கு நடைபெற்றது. அதன் பின்னர்  நண்பகல் 1 மணிக்கு நடக்க உள்ளது.

இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தொடர்ந்து இந்த ஜோதி தரிசனம் இரவு 7 மணி, 10 மணி, நாளை அதிகாலை 5.30 மணிக்கும் ஏழு திரைகளை நீக்கி நடைபெறுகிறது.

தைப்பூச ஜோதி தரிசனத்தில் கலந்து கொள்ள கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பஸ், வேன், கார்களில் வந்து குவிந்தனர்.

வடலூரில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்களாக காணப்பட்டன. சத்திய ஞானசபையில் அமைக்கப்பட்டுள்ள அணையா அடுப்பில் தொடர்ந்து சமையல் செய்து தர்மசாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வடலூரில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்கப்பட்டது.

தர்மசாலை மேடையில் தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகின்றன.

தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், விழுப்புரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள தால் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தைப்பூச ஜோதிதரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
Tags:    

Similar News