செய்திகள்

வாலாஜாபாத் அருகே வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவம்

Published On 2018-01-16 13:52 IST   |   Update On 2018-01-16 13:52:00 IST
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான காஞ்சீபுரம் வரதராஜபெருமாளுக்கு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது.

வைணவ ஸ்தலங்களில் முக்கியமானதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான காஞ்சீபுரம் வரதராஜபெருமாளுக்கு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு முத்தியாலுபேட்டை, ஐயன் பேட்டை, ஏகனாம்பேட்டை, திம்மராஜாம்பேட்டை, வாலாஜாபாத், புளியம்பாக்கம் வழியாக பழைய சீவரத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

அங்கு வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது விழும் வகையில் மலையின் படிக்கட்டுகள் வழியாக ஒய்யாரமாக இறங்கினார்.

மலையடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மபெருமாளுடன் பாலாற்றில் இறங்கி தெற்கு கரையில் உள்ள அப்பன் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு காவந்தண்டலம், சாலவாக்கம் கிராமங்களில் இருந்து வந்திருக்கும் பெருமாள்களுடன் இணைந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து திருமுக்கூடல் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கிராம மக்களுக்கு பெருமாள்கள் அருள்பாலித்தனர்.

பார்வேட்டை உற்சவத்தை முன்னிட்டு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Similar News