செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் திருத்தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்ற காட்சி.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2017-06-12 14:27 IST   |   Update On 2017-06-12 14:27:00 IST
காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 7-ம்நாள் உற்சவமான இன்று (திங்கள் கிழமை) தேரோட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம்நாள் உற்சவமான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

அதிகாலை 3 மணியளவில் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஊர்வலமாக வந்த எம்பெருமான் காந்திசாலை தேரடி பகுதியில் உள்ள திருத்தேரில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரில் ஏறி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

பின்னர் காலை 6 மணிக்கு மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் அமைச்சர்கள் சேவூர் ராமச் சந்திரன், கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ., பழனி, வி.சோமசுந்தரம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.


திருத்தேரில் ராஜ அலங்காரத்தில் எம்பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோ‌ஷத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். காந்திசாலை, காமராஜர் வீதி, இந்திராகாந்தி சாலை, ராஜவீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழிநெடுக சாமிக்கு தீபாராதனை காட்டி கும்பிட்டனர்.

நகரின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதி மானி தலைமையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை காஞ்சீபுரம் வருகை தந்து காமாட்சியம்மன் கோயில், சங்கரமடம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளார். இதை தொடர்ந்து வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளுர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிகளுக்காக இன்றே போலீசார் நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News