செய்திகள்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கருடசேவை உற்சவம்

Published On 2017-06-08 15:36 IST   |   Update On 2017-06-08 15:36:00 IST
காஞ்சீபுரம் பிரசித்திபெற்ற வரதரஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் இன்று நடைபெற்றது.
காஞ்சீபுரம் பிரசித்திபெற்ற வரதரஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 6-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினந்தோறும் காலையும் மாலையும் எம்பெருமான் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திரு வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் இன்று நடைபெற்றது. அதிகாலை திருக்கோயிலில் இருந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய எம்பெருமான் கோபுர வாசலில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோ‌ஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். காந்தி சாலை தேசிகர் போயில் வழியாக பிள்ளையார்பாளையம் பகுதிக்கு எம்பெருமான் எழுந்தருளினார்.

பின்னர் காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் பகுதியில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தார். வழியெங்கும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சாமிக்கு தீபாரதனை காட்டி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

கருட சேவையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்ன தானமும் வழங்கப்பட்டது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நகரில் ஏராளமான இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் வள்ளிநாயகம் துணைத் தலைவர் ஜெயந்தி சோம சுந்தரம் ஏற்பாட்டில் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழகம் பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் இன்ஸ் பெக்டர்கள் சரவணன், வெற்றிச் செல்வன், ஜெய சங்கர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் பெண்கள் தங்கள் நகைகளை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு மகளிர் போலீஸ் முலம் சேப்டி பின்கள் வழங்கப்பட்டு சாதாரண உடையில் மகளிர் போலீசார் பொது மக்களிடையே கலந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Similar News