செய்திகள்

திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் விழாவில் பக்தர்களுக்கு அசைவ அன்னதானம்

Published On 2017-01-16 10:05 GMT   |   Update On 2017-01-16 10:05 GMT
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டிசுவாமி திருக்கோவிலில் 50வது ஆண்டு பொன்விழாவும், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழச்சியும் நடைபெற்றது.

இவ்விழா இரு தினங்கள் நடைபெறும். நேற்று காலையில் 100க்கும் மேற்பட்டோர் தலையில் பால்குடம் சுமந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

ஆண்டு தோறும் நடை பெறும் இந்த விழாவில் கிராமத்தில் உள்ள பெண்கள் பூ, பழம்,தேங்காய் வைத்த தட்டுகளை தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் முனியாண்டி சுவாமிக்கு மஞ்சள்,சந்தனம், பால் உள்ளிட்ட பல் வேறு அபிஷேகங்கள் நடை பெற்றது. பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உள்ளுர் மற்றும் வெளியூர் களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முனியாண்டி கோவில் 50ஆண்டு பொன் விழாவில் கலந்துகொண்ட கோவை தெற்குதொகுதி எம்.எல்.ஏ. அர்ஜுனன் விழா மலரை வெளியிட்டார்.

இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டு பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் விழா தலைவர் துரை கோவிந்தராஜன், செயலாளர் வி.கே.ஆர். சேகர், பொருளாளர் நாகேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News