செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேசம் வெற்றி

Published On 2019-06-17 17:41 GMT   |   Update On 2019-06-18 01:11 GMT
டான்டனில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேச அணி.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. ஷகிப் அல்-ஹசன் சதம் அடித்து அசத்தினார்.

உலக கோப்பை கிரிக்கெட்

10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இதில் டவுன்டானில் நேற்று நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேசத்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

3-வது ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் பவுண்டரியை அடித்தது. 13 பந்துகளை சந்தித்த அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ரன் எதுவும் எடுக்காமல் 4-வது ஓவரில் முகமது சைபுதீன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

இதனை அடுத்து விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், இவின் லீவிஸ்சுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 24.3 ஓவர்களில் 122 ரன்னை எட்டிய போது இவின் லீவிஸ் (70 ரன்கள், 67 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் சபீர் ரகுமானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் (25 ரன்) ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதைத்தொடர்ந்து ஹெட்மயர், ஷாய் ஹோப்புடன் ஜோடி நேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் 75 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஹெட்மயர் அதிரடியாக ஆடினார். முகமது சைபுதீன் வீசிய ஒரு ஓவரில் ஹெட்மயர் 2 சிக்சர் தூக்கி அசத்தினார். மொசாடெக் ஹூசைன் வீசிய ஒரு ஓவரில் ஹெட்மயர் பெரிய சிக்சர் விளாசினார். அது 104 மீட்டர் தூரம் சென்றது. 25 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஹெட்மயர் (50 ரன், 26 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன்) அந்த ஓவரிலேயே முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் தமிம் இக்பாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஸ்செல் ரன் எதுவும் எடுக்காமல் முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஜாசன் ஹோல்டர் வேகமாக மட்டையை சுழற்றினார். அவர் மோர்தசா பந்து வீச்சில் 105 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிக்சர் தூக்கி பிரமிக்க வைத்தார். அடித்து ஆடிய ஜாசன் ஹோல்டர் (33 ரன்கள், 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) முகமது சைபுதீன் பந்து வீச்சில் மக்முதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதனை அடுத்து நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் (96 ரன்கள், 121 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் லிட்டான் தாஸ்சிடம் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். கடைசி பந்தில் டேரன் பிராவோ (19 ரன்) முகமது சைபுதீன் பந்து வீச்சில் போல்டு ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. நடப்பு உலக கோப்பை போட்டி தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணி 300 ரன்களை தாண்டுவது இதுவே முதல்முறையாகும். ஒஷானே தாமஸ் 6 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். வங்காளதேச அணி தரப்பில் முகமது சைபுதீன், முஸ்தாபிஜூர் ரகுமான் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல்-ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட தமிம் இக்பால், சவுமியா சர்கார் இணை தொடக்கம் முதலே அடித்து ஆடியது. வெஸ்ட்இண்டீஸ் அணியின் ஷாட் பிட்ச் பந்து வீச்சை வங்காளதேச வீரர்கள் அச்சமின்றி விளாசினார்கள். இதனால் ரன் வேகமாக உயர்ந்தது. 8.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 52 ரன்னாக இருந்த போது சவுமியா சர்கார் (29 ரன், 23 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) ரஸ்செல் பந்து வீச்சில் கெய்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஷகிப் அல்-ஹசனும் அடித்து ஆடினார். 13.5 ஓவர்களில் வங்காளதேச அணி 100 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 121 ரன்னாக உயர்ந்த போது தமிம் இக்பால் (48 ரன், 53 பந்துகளில் 6 பவுண்டரியுடன்) ஷெல்டன் காட்ரெலால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் 1 ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்.

இதனை அடுத்து லிட்டான் தாஸ், ஷகிப் அல்-ஹசனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணையும் வேகமாக ரன் திரட்டியது. 29 ஓவர்களில் அந்த அணி 200 ரன்னை கடந்தது. இருவரும் அபாரமாக அடித்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ஷகிப் அல்-ஹசன் 83 பந்துகளில் சதம் அடித்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 9-வது சதம் இதுவாகும். 41.3 ஓவர்களில் வங்காளதேச அணி 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷகிப் அல்-ஹசன் 99 பந்துகளில் 16 பவுண்டரியுடன் 124 ரன்னும், லிட்டான் தாஸ் 69 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 94 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

உலக கோப்பை போட்டியில் வங்காளதேச அணி, வெஸ்ட்இண்டீசை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் உலக கோப்பை கிரிக்கெட்டில் 2-வது அதிகபட்ச சேசிங் இதுவாகும். இந்த வகையில் 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி 329 ரன்களை விரட்டி பிடித்ததே சாதனையாக உள்ளது.

Tags:    

Similar News