உலகம்

ஏற்கனவே 13 இருக்கு... 68 வயதில் கணவரின் அனுமதியின்றி 2 குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி..!

Published On 2025-11-21 13:56 IST   |   Update On 2025-11-21 13:56:00 IST
  • தனக்கு தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த மனைவி மேரிபெத் மீது அவர் போலீசில் புகார் செய்தார்.
  • 14 மற்றும் 15-வது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி மேரிபெத் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்தவர் மேரிபெத் லூயிஸ். இவர் தனது 62-வது வயதில் 13-வது குழந்தை பெற்றெடுத்து அங்குள்ள பத்திரிகை செய்திகளில் இடம்பிடித்திருந்தார்.

மேரிபெத் லூயிசுக்கு பிறந்த முதல் 5 குழந்தைகள் இயற்கையான கர்ப்பம் மூலம் பிறந்தன. மற்ற குழந்தைகள் ஐ.வி.எப். எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறையில் பிறந்தவை ஆகும். 13 குழந்தைகள் இருந்ததால் மேரி பெத்தின் கணவர் பாப் இனிமேல் தங்களுக்கு குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

ஆனால் 13 குழந்தைகள் இருந்தும் மேரிபெத் லூயிசுக்கு குழந்தைகள் மீதான ஆசை அடங்கவில்லை. குழந்தை பெற்றெடுப்பதில் தீராத ஆசை கொண்ட மேரிபெத், கணவருக்கு தெரியாமலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்க முடிவு செய்தார்.

இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு தனது 68-வது வயதில் அவருக்கு வாடகைத்தாய் மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கான பெற்றோர் உரிமை சான்றிதழ், தபாலில் வந்தபோது தான் மேரிபெத்தின் கணவர் பாப்பிற்கு 14, 15-வது குழந்தைகள் பிறந்த விஷயமே தெரியவந்தது.

தனக்கு தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த மனைவி மேரிபெத் மீது அவர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அந்த குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மேரிபெத் நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு மேரிபெத் - பாப் தம்பதியே குழந்தைகளின் சட்டப்பூர்வ பெற்றோர் என தீர்ப்பு அளித்தது. ஆனால் குழந்தைகளை வளர்த்து வரும் காப்பகம் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.

மருத்துவமனையில் வாடகைத் தாய் ஒப்பந்தத்தில் கணவர் பெயரில் மேரிபெத் போலியாக கையெழுத்திட்டு உள்ளார். மேலும் கோர்ட்டு விசாரணையின்போது காணொலி காட்சி மூலம் கணவர் ஆஜராவதுபோல் மேரிபெத் ஆள்மாறாட்டம் செய்ததும் தெரியவந்து உள்ளது. இந்த நிலையில் 14 மற்றும் 15-வது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி மேரிபெத் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News