உலகம்

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை: 18 நாளில் 6வது சம்பவம்

Published On 2026-01-06 18:47 IST   |   Update On 2026-01-06 18:47:00 IST
  • தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
  • வங்கதேசத்தில் 18 நாளில் 6 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

டாக்கா:

வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.

இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

நேற்று ஜெஸ்ஸோர் மாவட்டம் ஆருவா கிராமத்தைச் சேர்ந்த ராணா பிரதாபை (35) மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஷிவ்பூர் உப மாவட்டம் நர்சிங்கடி நகரைச் சேர்ந்தவர் சரத் சக்ரவர்த்தி மணி (40). இவர் சார் சிந்தூர் பஜாரில் மளிகைக்கடை நடத்தி வந்தார்.

நேற்று இரவு கடையில் இருந்த அவரை மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த சரத் சக்ரவர்த்தியை அப்பகுதி மக்கள் மீட்டுச்சென்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

சரத் சக்ரவர்த்தி மணி தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு, சில ஆண்டுக்கு முன் வங்கதேசத்திற்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் கடந்த 18 நாட்களில் இந்துக்கள் கொல்லப்பட்ட 6-வது சம்பவம் இதுவாகும். இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News