உலகம்

இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை

Published On 2022-06-16 15:57 GMT   |   Update On 2022-06-16 15:57 GMT
  • ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தேவையான கோதுமை அனுப்பப்படும் என்று இந்தியா தெரிவித்தது.
  • சர்வதேச நிலவரங்களால் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கருதி ஐக்கிய அரபு அமீரகம் நடவடிக்கை

துபாய்:

கோதுமை உற்பத்தியில், உலகில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. பல்வேறு நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்து வருகிறது.

இதற்கிடையே விளைச்சல் குறைவு, உள்நாட்டு தேவை ஆகியவற்றால் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த மே 13-ந்தேதி முதல் இந்தியா தடை விதித்தது.

இதற்கிடையே தனி ஒப்பந்தம் செய்து வர்த்தகம் மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு வழக்கம்போல் கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் என்று தடை உத்தரவில் இந்தியா திருத்தம் செய்தது. அதன்படி ஒருங்கிணைந்த பொருளாதார நல்லுறவு வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தேவையான கோதுமை அனுப்பப்படும் என்று இந்தியா தெரிவித்தது.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யும் ஐக்கிய அரபு அமீரகம், உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச நிலவரங்களால் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கருதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 4 மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டு தேவையை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மே 13-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த கோதுமை, கோதுமை மாவு ஆகியவற்றை உரிய ஆவணங்களை அளித்து ஏற்றுமதி செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News