உலகம்

குண்டு வெடிப்பு நடந்த பஸ் நிறுத்தத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

ஜெருசலேமை உலுக்கிய இரட்டை குண்டு வெடிப்பில் ஒருவர் பலி: 21 பேர் படுகாயம்

Published On 2022-11-24 02:36 GMT   |   Update On 2022-11-24 02:36 GMT
  • குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
  • இந்த தாக்குதலை பாலஸ்தீன போராளிகள் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

ஜெருசலேம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பகைமை நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இருநாடுகளுக்கு இடையில் மோதல் நீடிக்கிறது. எனினும் அந்த 2 பகுதிகளும் தற்போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரில் இஸ்ரேலியர்களை குறிவைத்து கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அப்படி தாக்குதல்களில் ஈடுபடும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் வீரர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுகின்றனர்.

அதுமட்டும் இன்றி மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்களில் பதுங்கியிருக்கும் போராளிகளை பிடிப்பதற்காக நடத்தப்படும் தேடுதல் வேட்டையின்போது அப்பாவி பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேற்குக்கரை மற்றும் ஜெருசலேமில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ஜெருசலேம் நகரின் நுழைவுவாயிலில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை வழக்கம் போல் மக்கள் பலர் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். குண்டு வெடிப்பில் சிக்கி 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் குண்டு வெடிப்பு நடந்த பஸ் நிறுத்தத்துக்கு செல்லக்கூடிய சாலையை மூடி அந்த பகுதி முழுவதையும் தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதை தொடர்ந்து குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ஜெருசலேம் நகரின் நுழைவுவாயிலில் குண்டு வெடித்த சிறிது நேரத்தில் அந்த நகரின் வடக்கு பகுதியில் ரமோட் என்கிற இடத்தில் உள்ள மற்றொரு பஸ் நிறுத்தத்தில் அடுத்த குண்டு வெடித்தது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 2 குண்டு வெடிப்புகளிலும் காயமடைந்த 21 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரட்டை குண்டு வெடிப்பு ஜெருசலேம் நகரை உலுக்கியது. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலை பாலஸ்தீன போராளிகள் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த ஆண்டு மேற்குக்கரை மற்றும் ஜெருசலேமில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் 19 இஸ்ரேலியர்களும், 130-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News