உலகம்

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க...துரதிர்ஷ்டம் துரத்தும் எனக்கூறி நிரூபிக்க ஐபோனை அபேஸ் செய்த ஜோதிடர்

Published On 2026-01-06 21:11 IST   |   Update On 2026-01-06 21:11:00 IST
  • விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும் என்று கணித்துள்ளார்
  • தாய்லாந்து கலாச்சாரத்தில், ஜோதிடம் ஆழமாக வேரூன்றியது

தான் சொன்ன ஜோசியத்தை உண்மை என நிரூபிக்க பெண்ணின் ஃபோனை திருடிய ஜோதிடர் கைது செய்யப்பட்ட சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.

தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் 38 வயதான உடோம்சாப் முயாங்கேவ் என்ற ஜோசியர் புத்தாண்டு அன்று, 19 வயதான பிம் என்ற இளம்பெண்ணிற்கு சீட்டுப் பார்த்து பலன் கூறியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு விரைவில் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும், அவர் ஒரு விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும் என்றும் கணித்துக் கூறியுள்ளார்.

பின்னர் துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க ஒரு சடங்கு செய்ய வேண்டும். அதற்கு பணம் செலவாகும் எனக் கூறியுள்ளார். ஆனால் சடங்கு வேண்டாம் என்று தவிர்த்து அப்பெண் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே தனது ஐபோன் காணாமல் போனதை பிம் அறிந்தார். ஜோசியம் பார்க்கும்போது ஃபோனை தனது அருகில் வைத்ததை நினைவுக்கூர்ந்த பிம், மீண்டும் அங்கு சென்று ஜோசியரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

அதற்கு, தனது வார்த்தைகள் பலித்ததாக உடோம்சாப் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த பிம் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து ஜோசியரின் பையைச் சோதனையிட்டபோது, முகக்கவசம் வைக்கும் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐபோனை மீட்டனர். விசாரணையில் பணத்திற்காக இவ்வாறு செய்ததாக உடோம்சாப் முயாங்கேவ் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து கலாச்சாரத்தில், ஜோதிடம் ஆழமாக வேரூன்றியது. அங்கு இது முக்கிய தொழிலாகவே, குறிப்பாக லாபகரமானதாக, முதலீடுகள் எல்லாம் போடப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News