உலகம்

வரி விதிப்பிற்கு எதிர்ப்பு- இலங்கையில் இன்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2023-03-01 08:59 GMT   |   Update On 2023-03-01 08:59 GMT
  • இலங்கையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
  • வரி உயர்வை உடனே திரும்ப வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

கொழும்பு:

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.

அதன் பிறகு அவர் பொருளாதார சரிவில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அத்தியாவசிய பொருட்கள் மீது புதிய வரியை விதித்தார். இதற்கு பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஏற்கனவே விலைவாசி உயர்வால் தத்தளித்து கொண்டிருக்கும் போது புதிய வரிகளை விதிப்பதா? என கண்டனம் தெரிவித்தனர். மேலும் வரிவிதிப்புக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் எனக்கோரி இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.

இந்த போராட்டத்துக்கு வங்கி ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர், டாக்டர்கள் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்த போராட்டத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி இன்று (1-ந்தேதி) தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அவர்கள் வரி உயர்வை உடனே திரும்ப வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News