உலகம்

இலங்கையில் இருந்து தப்ப முயன்ற பசில் ராஜபக்சேவை தடுத்து நிறுத்திய மக்கள்

Published On 2022-07-12 13:26 IST   |   Update On 2022-07-12 13:26:00 IST
  • அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
  • அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி செல்ல முயன்றார்.

கொழும்பு:

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்த நாட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவி ஏற்றார்.

அதன் பிறகும் இலங்கையில் பொருளாதார நெருக் கடிக்கு தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக இலங்கையில் மீண்டும் தொடர் போராட்டங்கள் நடந்தன.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் திடீரென்று வன்முறையாக மாறியது.

இதற்கிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில் சபாநாயகர் அபேவர்த்தனா தலைமையில் பாராளுமன்ற அனைத்து கட்சிகளின் அவசர கூட்டம் நடந்தது. அதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்.

கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டம் நடத்தினார்கள். அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை பயன்படுத்தினார்கள். நீச்சல் குளத்தில் குளித்தனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பயன்படுத்திய படுக்கையிலும் தூங்கினர்.

போராட்டக்காரர்கள் தனது மாளிகைக்குள் நுழையும் முன்பே அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் தற்போது ராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி செல்ல முயன்றார். இவர் மகிந்த ராஜபக்சேவின் மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

இவர் ராஜபக்சே குடும்பத்தில் உள்ள கடைசி தம்பி ஆவார். பொதுமக்கள் போராட்டம் வெடித்ததும் முதல் முதலில் இவர்தான் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இவர் நேற்று இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் தப்பி செல்ல திட்டமிட்டு கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் முக கவசம் அணிந்து இருந்ததால் பெரும்பாலான பயணிகளுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. ஆனால் அதே வேளையில் விமான நிலைய அதிகாரிகளும், அங்கிருந்த போராட்டக்காரர்களும் பசில் ராஜபக்சே தப்பி செல்வதை கண்டுபிடித்தனர்.

பசில் ராஜபக்சேவுக்கு அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 2 நாடுகளிலும் குடியுரிமை உள்ளது. எனவே அவர் விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே போராட்டக்காரர்களும் பொதுமக்களும் பசில் ராஜபக்சேவை தடுத்து நிறுத்தினார்கள். விமான நிலைய அதிகாரிகளும் அவரை விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. அவர் விமானத்தில் தப்பி சென்றால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் என்பதால் அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்தனர்.

இதனால் இரவு 12.15 மணிக்கு விமான நிலையத்துக்கு சென்ற பசில் ராஜபக்சே அதிகாலை 3.15 மணி வரை அங்கேயே இருந்தார்.

மேலும் விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறையில் அவருக்கு சேவை செய்யவும் ஊழியர்கள் மறுத்து விட்டனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக அரசு தொடர்புடைய முக்கிய பிரமுகர்களை நாட்டை விட்டை வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று குடியுரிமை அதிகாரிகளுக்கு நெருக்கடி இருப்பதால் அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை என்று அதன் சங்க தலைவர் கே.ஏ.எஸ். கணு கலே தெரிவித்தார்.

ராஜபக்சே குடும்பத்தினர் தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக போராட்டக்காரர்கள் கொழும்பில் இருந்து விமான நிலையம் வரை சோதனை சாவடி அமைத்துள்ளனர். அந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த கண்காணிப்பையும் மீறி பசில் ராஜபக்சே கொழும்பு சர்வதேச விமான நிலையம் வரை சென்று விட்டார்.

பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அவரை கண்டுபிடித்ததாலும், அதிகாரிகள் அவரை வெளிநாடு செல்ல அனு மதிக்காததாலும் பசில் ராஜபக்சே விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.

Tags:    

Similar News