உலகம்

ரூ.650 கோடி செலவில் இந்தியா உதவியுடன் இலங்கையில் ரெயில் பாதை சீரமைப்பு பணி தொடக்கம்

Published On 2023-01-10 07:32 IST   |   Update On 2023-01-10 07:32:00 IST
  • இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை வழங்கி வருகிறது.
  • இலங்கை மந்திரி பந்துல குணவர்தனா இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.

கொழும்பு :

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் அங்கு பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 252 கி.மீ. தூர ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகளுக்கு உதவ முன்வந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரெயில் பாதை 81 மில்லியன் டாலர் (சுமார் ரூ.650 கோடி) மதிப்பில் சீரமைக்கப்படுகிறது.

இலங்கையில் பல்வேறு ரெயில் பாதை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இர்கான் இன்டர்நேஷனல் என்ற இந்திய நிறுவனம், இந்த பணிகளை மேற்கொள்கிறது.

இதில் முதல்கட்டமாக மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான 43 கி.மீ. தூர பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இதில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கையின் போக்குவரத்து மந்திரி பந்துல குணவர்தனே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோபால் பாக்லே பேசும்போது, 'இலங்கை ரெயில்வே துறையில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமான திட்டங்களை இந்தியா மேற்கொண்டு உள்ளது. மேலும் சுமார் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டிலும், பரிசீலனையிலும் உள்ளன' என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த திட்டம் குறித்து இந்திய தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், 'மதவாச்சியில் ரெயில் பாதை சீரமைப்பு பணியின் அதிகாரபூர்வ திறப்பு விழாவுடன் இந்தியா-இலங்கை ரெயில்வே ஒத்துழைப்பின் புகழ்பெற்ற புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது' என குறிப்பிட்டு இருந்தது.

இந்த தொடக்க விழாவில் பேசிய இலங்கை மந்திரி பந்துல குணவர்தனா இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்தார். கடந்த 1905-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரெயில்பாதை ஒரு நூற்றாண்டுக்கு மேல் மேம்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான இந்த ரெயில்பாதை மேம்பாட்டு பணிகள் 5 மாதங்களில் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.

Similar News