உலகம்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அப்துல் ரகுமான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

Published On 2023-01-17 13:02 IST   |   Update On 2023-01-17 13:02:00 IST
  • பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.
  • அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் அந்த அமைப்பின் தலைவரும், மும்பை, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார்.

அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு, காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.

இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தது. இதேபோல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.

இந்தநிலையில் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி உலக அளாவிய பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டுள்ளான். இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எல். அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2016-ன் படி சொத்துகள் முடக்கம், பயண தடை, ஆயுதத் தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. சபை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

இவருக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு உண்டு. மேலும் இந்தியாவில் நடந்த செங்கோட்டை தாக்குதல் (2000-ம் ஆண்டு) ராம்பூர் சி.ஆர்.பி.எப். முகாம் தாக்குதல் (2008-ல்), ஸ்ரீநகர் தாக்குதல் (2018) உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்புடையவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக, அப்துல் ரகுமான் மக்கிக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதி மன்றம் சிறை தண்டனை விதித்தது.

Tags:    

Similar News