உலகம்

ஆப்கானிஸ்தானில் அதிரடி தண்டனை- திருடிய குற்றத்திற்காக 4 பேர் கையை துண்டித்த தலிபான்கள்

Published On 2023-01-18 10:44 GMT   |   Update On 2023-01-18 13:04 GMT
  • ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் 7-ந்தேதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.
  • ஆப்கானிஸ்தானில் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் சமீபத்தில் அறிவித்தனர். கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்தநிலையில் திருடிய குற்றத்துக்காக 4 பேரின் கைகளை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கந்தகாரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திருட்டு உள்ளிட்ட குற்றசாட்டப்பட்ட 9 பேரை அழைத்து வந்தனர். அவர்களுக்கு 35 முதல் 39 முறை கசையடி அளிக்கப்பட்டது.

பின்னர் திருட்டு குற்றத்துக்காக 4 பேரின் கைகளை வெட்டி துண்டித்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு கடந்த மாதம் 7-ந்தேதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.

இதேபோல் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்ற தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதும் அதை தலிபான்கள் அரசு கண்டு கொள்ளவில்லை.

Tags:    

Similar News