உலகம்

 திரிகோணமலை நீதிமன்றம்

இலங்கை திரிகோணமலை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை

Published On 2022-08-26 11:34 GMT   |   Update On 2022-08-26 11:34 GMT
  • நிபந்தனைகளுடன் மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு.
  • விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் விரைவில் தாயகம் வருகை.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடலுக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த 22ந் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், உடனடியாக அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் இலங்கை வசம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.  இதனிடையே, நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 11ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து திரிகோணமலை சிறையில் அடைத்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று திரிகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

Similar News