உலகம்

இங்கிலாந்தின் குஜராத்தி சங்கத்தில் துப்பாக்கி சூடு: திருமண விருந்தில் திடீர் பரபரப்பு

Published On 2023-07-03 13:39 GMT   |   Update On 2023-07-03 13:39 GMT
  • ஒரு கார் அந்த இடத்திற்கு பின்புறம் ஓட்டிச் செல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தாக்கியவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் திருப்பிச் சுட்டதாகவும் தெரிகிறது.

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் குஜராத்தி சங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு திருமண விழா நடைபெற்றுள்ளது. 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட ஒரு திருமண விருந்தின்போது ஏற்பட்ட பிரச்சனையில் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்தில், ஒரு கார் அந்த இடத்திற்கு பின்புறம் ஓட்டிச் செல்லப்பட்டிருப்பதாகவும், அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண விருந்து நடந்த திசையிலிருந்து மற்றொரு நபர், முதலில் தாக்கியவரை நோக்கி துப்பாக்கியால் திருப்பிச் சுட்டதாகவும் தெரிகிறது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும், ஒரு வாகனம் சேதமடைந்துள்ளதால் அது தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வார இறுதியில் தடயவியல் மற்றும் கண்காணிப்பு கேமரா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

வால்வர்ஹாம்ப்டன் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் பால் சதர்ன் கூறுகையில், "இது ஒரு முற்றிலும் பொறுப்பற்ற தாக்குதல். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு இருந்தவர்களுடனும், பார்த்தவர்கள் அல்லது ஏதேனும் பதிவு செய்தவர்களுடனும் நாங்கள் பேசுவது அவசியம். அதன் மூலம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடியும். மக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், பாதுகாப்பு குறித்து உறுதியளிக்கவும் கூடுதல் ரோந்துகளை மேற்கொள்வோம்" என்றார்.

Tags:    

Similar News