ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: சீனா சொல்வது என்ன?
- ஷேக் ஹசீனாவுக்கு நேற்று மரண தண்டனை வழங்கப்பட்டது.
- ஷேக் ஹசீனா விவகாரம் வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம் என சீனா கருத்து தெரிவிப்பு.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, டாக்காவின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் நேற்று மரண தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து தங்களிடம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவை வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு இந்தியாவுடன் விரோத போக்கை எதிர்கொண்டு வருகிறது. அதேவேளையில் சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது.
இந்த நிலையில் சீனாவிடம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் "ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கபட்டது அவர்களுடைய உள்நாட்டு விவகாரம்" எனத் தெரிவித்தார்.
மேலும், "சிறந்த அண்டை நாடு மற்றும் நட்புறவு கொள்கையை சீனா கடைப்பிடிக்கிறது.
வங்கதேசம் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடையும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம்" என்றார்.