இந்தியா

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்: ஜோ பைடன் விருந்து அளிக்கிறார்

Published On 2023-05-11 07:41 IST   |   Update On 2023-05-11 07:50:00 IST
  • ஜூன் 22-ந் தேதி ஜோ பைடனை சந்திக்கிறார்.
  • இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்.

வாஷிங்டன்

பிரதமர் மோடி, அரசுமுறை பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்.

இந்த பயணத்தின்போது, ஜூன் 22-ந் தேதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கிறார். மோடியை கவுரவிக்கும்வகையில், அவருக்கு ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார்.

இத்தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரின் ஜீன் பியரி கூறியதாவது:-

பிரதமர் மோடி அமெரிக்கா வருகிறார். இந்த பயணம், அமெரிக்கா-இந்தியா இடையிலான ஆழ்ந்த நெருக்கத்தை உறுதிப்படுத்தும். அமெரிக்கர்களையும், இந்தியர்களையும் ஒன்றாக பிணைக்கக்கூடிய குடும்ப, நட்புறவையும் உறுதிப்படுத்தும்.

சுதந்திரமான, வளமான, பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும். பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, விண்வெளி போன்ற முக்கிய துறைகளில் தொழில்நுட்ப உறவை அதிகரிக்கும்.கல்வி தொடர்பான கருத்து பரிமாற்றங்கள், மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள். பருவநிலை மாற்றம், சுகாதார பாதுகாப்பு போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்ள இணைந்து பணியாற்றுவது பற்றியும் பேசுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல், மத்திய வெளியுறவு அமைச்சகமும் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை உறுதிப்படுத்தியது.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின்பேரில், பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். அப்பயணத்தில், ஜூன் 22-ந் தேதி, இரவுநேர விருந்தில் பங்கேற்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியும், ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர்.

இம்மாதம் 19-ந் தேதி முதல் 21-ந் தேதிவரை ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டிலும், 24-ந் தேதி ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடக்கும் 'குவாட்' தலைவர்கள் மாநாட்டிலும் இருவரும் சந்திக்க உள்ளனர்.

வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா ஜி20 மாநாடு நடத்துவதற்கு முன்பு, பிரதமரின் அமெரிக்க பயணம் அமைந்துள்ளது.

Tags:    

Similar News