உலகம்

பிரதமர் மோடி

இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பு- ஷாங்காய் உச்சி மாநாடில் பிரதமர் மோடி பேச்சு

Published On 2022-09-16 08:49 GMT   |   Update On 2022-09-16 09:01 GMT
  • உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது.

தாஷ்கண்ட்:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா தொற்று நோய் காலத்திற்குப் பிறகு, உலகம் பொருளாதார மீட்சிக்கான சவாலை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா காலம் மற்றும் உக்ரைன் போர், உலகளாவிய விநியோக சங்கிலியில் தடைகளை உருவாக்கியது. இதன் விளைவாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் நெருக்கடி ஏற்பட்டது.

ஷாங்காய் அமைப்பு எங்கள் பிராந்திய பகுதியில் நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலியை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு சிறந்த இணைப்பு மற்றும் போக்குவரத்து உரிமைகளை வழங்குவது முக்கியம். நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது.  


இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு பாரம்பரிய மருந்துகளுக்கான மையத்தை குஜராத்தில் தொடங்கியது. பாரம்பரிய சிகிச்சைக்கான முதல் மற்றும் ஒரே உலகளாவிய மையம் இதுவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News