உலகம்

பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த பாகிஸ்தான் வலியுறுத்தல்

Published On 2025-04-26 10:29 IST   |   Update On 2025-04-26 10:29:00 IST
  • பாகிஸ்தானுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துள்ளது.
  • உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.

இஸ்லாமாபாத்:

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

பாகிஸ்தானுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, எல்லைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.

இதையடுத்து பாகிஸ்தானும் பதிலடியாக இந்திய விமானங்கள் தங்களது நாட்டு வான் எல்லையை பயன்படுத்த தடை விதித்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ் டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்த பாகிஸ்தான், இத்தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா முகமது ஆசிப் கூறியதாவது:-

பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச ஆய்வாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பாகிஸ்தான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. இந்தப் போர் வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் இந்தப் போர் வெடிப்பது இந்தப் பிராந்தியத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்.

பயங்கரவாத தாக்குதலின் பின்விளைவை இந்தியா ஒரு சாக்காகப் பயன்படுத்தி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து உள்ளது. உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.

எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானைத் தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா செயலிழந்து போய் இருக்கிறது. பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தாக்குதல்களைத் திட்டமிடவோ அல்லது நடத்தவோ எந்த திறனும் அந்த அமைப்பிடம் இல்லை.

அந்த அமைப்பில் உள்ள எஞ்சியிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுக் காவலில் உள்ளனர், மேலும் சிலர் காவலில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் விடுமுறைகளை அரசு ரத்து செய்துள்ளது. மேலும் பலூச் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் இருந்து வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் எல்லையில் வீரர்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.

Tags:    

Similar News