உலகம்

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை

Published On 2025-05-22 04:47 IST   |   Update On 2025-05-22 04:47:00 IST
  • பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.
  • இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் மூண்டு பேச்சுவார்த்தைக்குப் பின் அடங்கியது.

இஸ்லாமாபாத்:

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு போட்டியாக, தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து பாகிஸ்தான் அறிவித்தது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் மூண்டு பேச்சுவார்த்தைக்குப் பின் அடங்கி உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐ.சி.ஏ.ஓ.) விதிகளின் படி, ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் வான்வெளி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால், கடந்த மாதம் பாகிஸ்தான் விதித்த தடை மே 23-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் அந்த தடையை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.

Tags:    

Similar News