உலகம்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவு.. மோடி-ஜோ பைடன் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்த பாக். ஊடகங்கள்

Published On 2023-06-23 18:48 IST   |   Update On 2023-06-23 18:48:00 IST
  • ஐ.நா.வில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஒரு முக்கியமான நிகழ்வாக இரு நாட்டு அதிபர்களும் ஒன்றாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். இதில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த இரு நாட்டு அதிபர்களும் தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தினர். இந்த செய்தி பாகிஸ்தான் சார்ந்த ஊடகங்களால் பெரிதும் முக்கியத்துவம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

டான் (Dawn) வெளியிட்டிருக்கும் செய்தி:

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடை செய்யப்பட்ட "லஷ்கர்-இ-தொய்பா" மற்றும் "ஜெய்ஷ்-இ-முகமது" போன்ற தீவிரவாத குழுக்களுக்கு எதிராக அந்நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றாக நிற்கின்றன. பயங்கரவாதம், வன்முறை மற்றும் தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களைப் பயன்படுத்துவதை பிரதமர் மோடியும், அதிபர் பைடனும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

மேலும், பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்தப் பகுதியும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர். 26/11 மும்பை மற்றும் பதான்கோட் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

ஜியோ நியூஸ் வெளியிட்டிருக்கும் செய்தி:

பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பிடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். அல்-கொய்தா, டேஷ், மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட ஐ.நா.வில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பைடனும் மோடியும் மீண்டும் வலியுறுத்தினர். 2008ம் ஆண்டில் ரத்தக்களரியான மும்பை தாக்குதல் மற்றும் பதான்கோட் சம்பவங்கள் உள்ளிட்ட தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தி நியூஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டிருக்கும் செய்தி:

இந்தியாவை குறி வைத்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை ஒடுக்கவேண்டும் என அமெரிக்க அதிபர் பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மோடி அரசுமுறை பயணமாக வாஷிங்டனுக்குச் சென்றபோது இரு நாட்டு அதிபர்களும் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்டதாகக் கூறப்படும் "லஷ்கர்-இ-தொய்பா" மற்றும் "ஜெய்ஷ்-இ-முகமது" போன்ற தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

பிரதானமான பாகிஸ்தான் சார்பு பத்திரிக்கைகள், பாகிஸ்தானை கண்டிக்கும் விதமான இந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது அனைவராலும் கவனிக்கப்படுகிறது.

Tags:    

Similar News