உலகம்

இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரண்டை ரத்து செய்தது பாகிஸ்தான் நீதிமன்றம்

Published On 2023-03-18 16:27 GMT   |   Update On 2023-03-18 16:27 GMT
  • இம்ரான் கானை கைது செய்ய போலீசார் முயன்றதால் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் திரண்டனர்
  • போலீசாருக்கும் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாத்து வரும் அரசு கருவூலமான தோஷகனாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். இதனால் அவரது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பரிசுப்பொருட்கள் முறைகேடு வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் கான் இன்று தனது வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் போலீசார் அதிரடியாக பேரிகார்டுகளை அகற்றிவிட்டு இம்ரான் கான் வீட்டின் முன் திரண்டிருந்த ஆதரவாளர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் நீதிமன்ற வளாகத்திலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மோதல் ஏற்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜரானார் இம்ரான் கான். அப்போது இம்ரான் கானின் கைது வாரண்டை ரத்து செய்த நீதிமன்றம், அவரை வீட்டிற்கு செல்ல அனுமதி அளித்தது. வழக்கு விசாரணை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Tags:    

Similar News