உலகம்

ஆங் சான் சூ கி

தேர்தல் மோசடி வழக்கு - ஆங் சான் சூ கிக்கு மேலும் 3 ஆண்டு சிறை

Published On 2022-09-29 17:51 GMT   |   Update On 2022-09-29 17:51 GMT
  • தேர்தல் மோசடி வழக்கில் மியான்மர் தலைவர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
  • ஆங் சான் சூ கி மீது இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெய்பிடாவ்:

மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூ கி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூ கியின் தேசிய ஜனநாய லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர்மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது.

இந்நிலையில், தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூ கிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூ கிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

சூ கி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதைத் தடுப்பதையும், அதிகாரத்தின் மீதான ராணுவத்தின் பிடிக்கு சவால் விடுவதையும் நோக்கமாகக் கொண்டதாக ராணுவ எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News