உலகம்

வெளிநாட்டு சதி என்று இம்ரான் கான் குறிப்பிடுவது மிகப்பெரிய நாடகம்: மரியம் நவாஸ் குற்றச்சாட்டு

Published On 2022-07-06 03:13 GMT   |   Update On 2022-07-06 03:13 GMT
  • இம்ரான் கான் தனது சதி வார்த்தைகளில் மக்களை பிஸியாக வைத்திருந்தார்.
  • பாகிஸ்தானின் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல்கள் பிடிஐ ஆட்சியின் போது நடந்தன.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாட்டு சதி என்ற பெயரில் பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றினார் என்று ஆளுங்கட்சியான பிஎம்எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸ் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டசபையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு ஜூலை 17-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அடிக்கடி தற்போதைய அரசாங்கத்தை வெளிநாட்டினரால் இறக்குமதி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி வருகிறார். மேலும், அமெரிக்கா இந்த அரசாங்கத்தை சதி வேலைகளால் திணித்ததாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, லாகூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மரியம் நவாஸ், இம்ரான் கான் மீது குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது, இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தை புறக்கணித்தார்.

இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி மற்றும் அவரது கும்பல் ஆட்சி, பஞ்சாப் மாகாணத்தின் வளங்களை கொள்ளையடித்தது. இம்ரான் கான் கட்சியான பிடிஐ ஆட்சிக் காலத்தில், பஞ்சாப் அனாதை போல் இருந்தது. ஆனால் இப்போது சிங்கம் பிரதமராக மீண்டும் வந்துவிட்டது, ஆகவே பஞ்சாப் முன்பு போல் முன்னேறும். பாகிஸ்தானின் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல்கள் பிடிஐ ஆட்சியின் போது நடந்தன. துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தானிய அரசியலில் மிகப்பெரிய பொய்யர், குழப்பவாதி மற்றும் ஏமாற்றுக்காரர் ஒருவர் பிரதமரானார்.

நாட்டு மக்களை அமெரிக்கா அடிமைகளாக வைத்திருக்கிறது என்று அவர் மக்களிடம் அடிக்கடி பொய் கூறுவார். இப்படி அவர் தனது சதி வார்த்தைகளில் மக்களை பிஸியாக வைத்திருந்தார். வெளிநாட்டு சதியால் தன்னுடைய அரசாங்கம் கவிழ்ந்தது என்று இம்ரான் கான் கூறி வருவது, பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News