உலகம்

சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய இளைஞருக்கு 25 ஆண்டு சிறை

Published On 2025-05-16 23:02 IST   |   Update On 2025-05-16 23:02:00 IST
  • வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.
  • தி சாத்தானிக் வெர்சஸ் நாவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நியூயார்க்:

இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கடந்த 2022, ஆகஸ்ட் 12-ம் தேதி நியூயார்க்கில் உள்ள சௌடவுகுவா கல்வி நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது மேடையில் ஏறிய ஹாடி மாத்தர் சல்மான் ருஷ்டியை 12 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 6 வார சிகிச்சைக்கு பின் படிப்படியாக குணமானார்.

இந்தத் தாக்குதலில் ருஷ்டியின் தலை, கழுத்து, இடது உள்ளங்கை, கல்லீரல், குடல் உள்பட உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. வலது கண் பார்வையை இழந்த ருஷ்டியின் ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது. ஹாடி மாதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1988-ம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு இஸ்லாமிய மதவாதிகளிடையே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அவர் பல கொலை மிரட்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் அரங்கேறியது என கூறப்படுகிறது.

இந்நிலையில், குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Tags:    

Similar News