உலகம்

பிணங்களில் பணய கைதிகள் உள்ளனரா? - இடுகாட்டில் ஆராயும் இஸ்ரேல்

Published On 2024-01-19 11:36 GMT   |   Update On 2024-01-19 11:36 GMT
  • 132 பணய கைதிகள் ஹமாஸ் அமைப்பினர் வசம் இருப்பதாக இஸ்ரேல் கூறியது
  • தகுந்த தகவல்கள் வரும் போது குறிப்பிட்ட இடங்களை ஆராய்கிறது இஸ்ரேல் ராணுவம்

பாலஸ்தீனத்தில், 100 நாட்களை கடந்து இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வட காசாவில், இஸ்ரேலின் குண்டு வீச்சில் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் ஒரு இடுகாடு தகர்க்கப்பட்டது.

அக்டோபர் 7 அன்று 253 பேரை பணய கைதிகளாக கொண்டு சென்ற ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து சிலர் மீட்கப்பட்டாலும், 132 பேர் அவர்கள் வசம் உள்ளதாகவும், அவர்களில் 105 பேர் உயிருடன் இருப்பதாகவும், 27 பேர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் கூறியிருந்தது.

அவர்களை தேடி காசா முழுவதும் சல்லடை போட்டு தேடி வரும் இஸ்ரேலிய ராணுவ படை, கான் யூனிஸ் இடுகாட்டில் உள்ள கல்லறைகளில் உடல்களை தோண்டி, தேடப்படும் பணய கைதிகளின் உடல்கள் உள்ளதா என ஆராய்ந்து வருகிறது.

சர்வதேச சட்டங்களின்படி, போர் சூழலில் குறி வைத்து இடுகாட்டை தாக்குவது போர் குற்றமாக கருதப்படும். ஆனால், விதிவிலக்காக ராணுவ காரணங்களுக்காக இது போன்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.


இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தெரிவித்ததாவது:

பணய கைதிகளில், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இருந்தால் அவற்றை கண்டு பிடித்து, அடையாளம் கண்டு, உறவினர்களிடம் ஒப்படைப்பது போரின் நோக்கங்களில் ஒன்று.

உடல்கள் இருக்கலாம் என எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வரும் போது குறிப்பிட்ட இடங்களை நாங்கள் ஆராய்கிறோம்.

இடுகாட்டில் இருந்து அடையாளம் காண எடுக்கப்படும் உடல்கள், பாதுகாப்பான வேறொரு இடத்தில் தொழில்நுட்ப உதவியுடனும், இறந்தவர்களின் உடல்களுக்கு தரப்பட வேண்டிய மரியாதையுடனும் அடையாளம் காணப்படுகின்றன.

பணய கைதிகள் அல்லாதவர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் மறுஅடக்கம் செய்யப்படுகின்றன.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பிறந்த குழந்தைகளை மிருகத்தனமாக கொன்று, பலரை ஹமாஸ் பணய கைதிகளாக கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் இவ்வாறு கல்லறைகளில் தேடுதல் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இவ்வாறு இஸ்ரேல் கூறியது.

Tags:    

Similar News