உலகம்

நிலவின் தரையில் மோதிய ஜப்பான் விண்கலம் - லேசர் கருவி செயலிழந்ததாக விஞ்ஞானிகள் தகவல்

Published On 2025-06-25 08:03 IST   |   Update On 2025-06-25 08:03:00 IST
  • ஐஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள், விண்கலத்தின் லேசர் கருவியின் செயலிழப்பே விபத்துக்குக் காரணம் என்று கூறி உள்ளனர்.
  • நாசாவுடன் இணைந்து 4-வது முயற்சிக்கான திட்டம் ஒப்பந்தமாகி உள்ளது.

டோக்கியோ:

ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையமான ஜாஸா ஏற்கனவே நிலவில் விண்கலத்தை தரையிறக்கி உள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனமான ஐஸ்பேஸ் நிறுவனம், ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜனவரி மாதம் நிலவுக்கு அனுப்பியது. நிலவின் வடக்கில் அமைந்துள்ள உறை கடல் எனப்படும் மார் பிரிகோரிசில் தரையிறங்கும் இலக்குடன் அந்த விண்கலம் அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் இந்த மாத தொடக்கத்தில் நிலவின் தரையில் மோதி செயல் இழந்தது.

ரெசிலியன்ஸ் விண்கலம் மற்றும் அதன் உலவு கருவி ஆகியவை விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தை நாசாவின் லூனார் விண்கலம் கடந்தவாரம் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியது.

ஐஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள், விண்கலத்தின் லேசர் கருவியின் செயலிழப்பே விபத்துக்குக் காரணம் என்று கூறி உள்ளனர். லேசர் கருவி நிலவின் மேற்பரப்பு தூரத்தை துல்லியமாக அளவிட்டு கொடுக்காததால், வேகமாக சென்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறி உள்ளனர்.

மென்பொருள் செயலிழப்பால் கடந்த 2023-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் முதல் நிலவு விண்கலம் தரையிறங்க முடியாமல் விபத்துக்கு உள்ளானது. தற்போது அடுத்த 2 ஆண்டுகளுக்குள்ளாக அதன் 2-வது முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அந்த நிறுவனம் தனது 3-வது முயற்சியை 2027-ல் செய்ய உள்ளது. நாசாவுடன் இணைந்து 4-வது முயற்சிக்கான திட்டமும் ஒப்பந்தமாகி உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் தனியார் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட 7 நிலவில் தரையிறங்கும் முயற்சிகளில், ஒன்று மட்டுமே முழுமையான வெற்றி பெற்றுள்ளது. பயர்பிளை ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் மார்ச் மாதத்தில் அதன் புளூ கோஸ்ட் லேண்டரை நிலவில் தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News