வங்கதேசத்தில் இந்து தலைவர் கடத்திக் கொலை.. வேனில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடல்
- சமீபகாலமாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
- பபேஷ் சந்திர ராய் உடலை ஒரு வேனில் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி மாணவர் போராட்டத்தால் கவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உருவான இடைக்கால அரசின் தலைவராக அமைதிகான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதிவு ஏற்றார்.
ஆனால் அந்நாட்டில் அமைதி திரும்பிய பாடில்லை. முஸ்லீம் பெரும்பான்மை வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த வருட இறுதியில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இஸ்கான் தலைவர் சாமியார் சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்ட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இந்து தலைவர் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தினாஜ்பூர் மாவட்டம் பசுதேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பபேஷ் சந்திர ராய் (வயது 58). இவர் வங்காதேச பூஜா உத்ஜபன் பரிஷத்தின் பீரால் பிரிவின் துணைத் தலைவராகவும், அப்பகுதியில் உள்ள இந்து சமூகத்தின் முக்கிய தலைவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் பபேஷ் சந்திர ராய் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் பபேஷ் சந்திர ராயை கடத்தி சென்றனர். நராபரி கிராமத்திற்கு கொண்டு சென்று அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் பபேஷ் சந்திர ராய் உடலை ஒரு வேனில் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.