உலகம்

மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை

Published On 2022-09-03 02:52 GMT   |   Update On 2022-09-03 02:52 GMT
  • தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆங் சான் சூகி மறுத்து வருகிறார்.
  • ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட மொத்த சிறை தண்டனை 20 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
  • ஆங் சான் சூகி மீது இன்னும் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நோபிடாவ் :

மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

எனினும், அந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி அவரது அரசை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்து அதிகாரத்தை கைப்பறியது.

அதனை தொடர்ந்து ஆங் சான் சூகி உள்பட தேசிய ஜனநாயக லீக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரையும் ராணுவம் கைது செய்து அவர்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்ததது.

அந்த வகையில் மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆங் சான் சூகி திட்டவட்டமாக மறுத்து வருகிறார். ஆனால் அந்த நாட்டு ராணுவ கோர்ட்டு ஆங் சான் சூகி மீதான ஊழல் வழக்குகளில் அவரை குற்றவாளியாக அறிவித்து தொடர்ந்து தண்டனைகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது, லஞ்சம் வாங்கியது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளில் ஆங் சான் சூகிக்கு இதுவரை 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் ஆங் சான் சூகி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி அவரை குற்றவாளியாக அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதை தொடர்ந்து ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட மொத்த சிறை தண்டனை 20 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இது தவிர ஆங் சான் சூகி மீது இன்னும் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Tags:    

Similar News