உலகம்

இலங்கையில் இன்று புதிய அதிபர் தேர்வு

Published On 2022-07-20 01:58 GMT   |   Update On 2022-07-20 01:58 GMT
  • இடைக்கால அதிபராக ரணில் விக்மரசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இன்று அதிபர் தேர்வு நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொழும்பு :

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. மேலும் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் அவருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால் கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக இ-மெயில் மூலம் பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதத்தை அனுப்பினார்.

இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்மரசிங்கே நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் புதிய அதிபரை 20-ந்தேதி பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, ஜெ.வி.பி. கட்சி தலைவர் அனுராகுமாரதிசநாயக, இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமா ஆகிய 4 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

255 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார். பாராளுமன்றத்தில் ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அக்கட்சி ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

ஆனால் இலங்கை மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜி.எல்.பிரீஸ் அணியினர் முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப் பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனப்படுத்துவதாக நேற்று முன் தினம் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார்.

இதையடுத்து ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அதிபர் தேர்வு நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் அவர்களை தடுக்கவும் கலைந்து செல்லவும் விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கலவரத் தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடும் ரணில் விக்மரசிங்கேவுக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News