உலகம்

துபாயில் 3 இடங்களில் 30 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கம்

Published On 2024-05-24 03:08 GMT   |   Update On 2024-05-24 03:08 GMT
  • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சோதனை அடிப்படையில் மின்சார பஸ் இயக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • பொதுமக்களுக்கு மின்சார பஸ்சின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

துபாய்:

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாயில் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் வகையில் பஸ், மெட்ரோ ரெயில், டிராம், டாக்சி, படகு உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து சேவையில் இயக்கப்படும் வாகனங்களின் மூலம் கார்பன் உமிழ்தலை தடுக்கும் வகையில் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. துபாய் அரசின் பூஜ்ய கார்பன் உமிழ்தல் போக்குவரத்து திட்டத்தின் அடிப்படையில் அரசு பஸ் போக்குவரத்தில் இயக்கப்பட்டு வரும் பஸ்களை மின்சார பஸ்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சோதனை அடிப்படையில் மின்சார பஸ் இயக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது மின்சார பஸ் லா மெர் முதல் அல் சுபூ வரை இயக்கப்பட்டது. இந்த பஸ் சேவையில் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் மின்சார பஸ் சேவையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். பொதுமக்களுக்கு மின்சார பஸ்சின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

துபாய் அரசின் கொள்கைக்கு ஏற்ப பூஜ்ய கார்பன் உமிழ்தல் மூலம் துபாய் நகரின் முக்கிய பகுதிகளில் 30 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. இந்த பஸ்கள் பிசினஸ் பே, அல் வாசல் சாலை மற்றும் துபாய் மால் ஆகிய இடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் லா மெர், ராஷித் பின் பகைத் பள்ளிவாசல், அல் கொரைபா, உம்சுகிம் 1, உம்சுகிம் பூங்கா, வைல்ட் வாடி, மெர்கடோ மால், புர்ஜ் அல் அரப், அல் சுபு டிராம் நிலையம் மற்றும் துபாய் ஆப்சோர் செய்லிங் கிளப் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த பயணத்துக்கு ஏற்ப டீசல் என்ஜினால் இயக்கப்பட்டு வரும் 30 பஸ்கள் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். மேலும் படிப்படியாக மற்ற பஸ்களையும் இதேபோல் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News