உலகம்

"யாருமே தண்டிக்கப்படுவதில்லை" - கடை சூறையாடலால் தவிக்கும் உரிமையாளர்

Published On 2024-01-07 12:42 GMT   |   Update On 2024-01-07 12:42 GMT
  • திருட வந்த கும்பலில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்
  • இச்சம்பவங்களால் பலர் வாழ்வாதாரத்தையே இழக்கின்றனர் என்றார் ராமிரெஸ்

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகர எல்லைக்கு அருகே உள்ளது காம்ப்டன் (Compton).

காம்ப்டனில் மெக்சிகோவிலிருந்து வந்த குடும்பத்தை சேர்ந்த ரூபென் ராமிரெஸ் ஜுனியர் என்பவர் "ரூபென்'ஸ் பேக்கரி அண்ட் மெக்சிகன் ஃபுட்" எனும் ஒரு கடை நடத்தி வந்தார்.


கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் கடையின் முன் திடீரென 100க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு கும்பல் கடையை சூறையாட வந்தது. அக்கும்பலில் சிலர் ஒரு வெள்ளை நிற கியா (Kia) காரால் கண்ணாடி கதவு மீது மீண்டும் மீண்டும் மோதி கடையை உடைத்தனர்.

கடைக்குள் நுழைந்த அந்த கும்பல் சூறையாடியது. அவர்கள் தங்கள் இஷ்டம் போல் அங்குள்ள அலமாரிகளை உடைத்து உணவு பண்டங்களையும் வேறு சில பொருட்களையும் பெருமளவில் கொண்டு சென்றனர்.


அதில் முக்கியமாக பெருமளவு இறைச்சிகளும், மளிகை பொருட்களும், லாட்டரி டிக்கெட்டுகளும் இருந்தன.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால், ராமிரெசுக்கு சுமார் $70 ஆயிரம் இழப்பு ஏற்பட்டது.

இதை தவிர, கடையை மீண்டும் சுத்தப்படுத்தி அங்கிருந்த கண்ணாடி துகள்களை அகற்றவும் நீண்ட நேரமானது.

இது குறித்து ராமிரெஸ் தெரிவித்ததாவது:

ஆங்காங்கு இது போல் சிறு சம்பவங்களை கண்டிருந்தாலும், என் கடையில் நடந்தது போல் ஒரு சூறையாடலை இதற்கு முன் கண்டதில்லை. கண்காணிப்பு கேமிரா படக்காட்சிகளை காவல்துறையினர் காட்டினார்கள். அவர்களில் ஒருவரையும் நானோ என் குடும்பத்தினரோ இதற்கு முன் கண்டதில்லை. காம்ப்டன் காவல்துறை மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறை கண்டிப்பாக குற்றவாளிகளை கண்டு பிடிப்பார்கள் என நம்புகிறோம். பிரெட் செய்வதற்கான உபகரணங்களையும் அந்த கும்பல் சேதப்படுத்தி விட்டது. எங்கள் முதல் குறிக்கோள் கடையை மீண்டும் முன்னர் இருந்த நிலைக்கு கொண்டு செல்வதுதான். எங்கள் குடும்பம் மீள எத்தனை நாட்களாகும் என தெரியவில்லை. இது போன்ற சம்பவங்களால் பலர் வாழ்வதாரத்தையே இழக்கின்றனர். ஆனால், இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.

Tags:    

Similar News