உலகம்

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் - கொலம்பியாவில் ராகுல்.. கொந்தளித்த பாஜக

Published On 2025-10-03 08:58 IST   |   Update On 2025-10-03 08:58:00 IST
  • ஜனநாயக அமைப்பு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
  • சீனாவைப்போல, மக்களை அடக்கி சர்வாதிகார அமைப்பை இந்தியாவில் நடத்த முடியாது.

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்திய மாணவர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்துறை தலைவர்களுடன் அவர் சந்திப்பு நிகழ்த்தி வருகிறார்.

இந்நிலையில் கொலம்பியாவில் உள்ள EIA பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை பாஜகவை கொந்தளிக்க செய்துள்ளது.

நேற்று அங்கு பொறியியல் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா உலகிற்கு வழங்க நிறைய இருக்கிறது. அதில் நான் நம்பிக்கையுடன் உள்ளேன். ஆனால் தற்போது இந்தியாவின் கட்டமைப்பில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியா கவனிக்க வேண்டிய சில அச்சுறுத்தல்கள் உள்ளன.

 ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் தற்போது இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

இந்தியா பல மதங்கள், மரபுகள் மற்றும் மொழிகளைக் கொண்டது. ஜனநாயக அமைப்பே அனைவருக்கும் இடமளிக்கிறது. ஆனால், இப்போது ஜனநாயக அமைப்பு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

சீனா மையப்படுத்தப்பட்ட மற்றும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால், இந்தியா பரவலாக்கப்பட்ட, பல மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட சிக்கலான அமைப்பைக் கொண்டது. சீனாவைப்போல, மக்களை அடக்கி சர்வாதிகார அமைப்பை இந்தியாவில் நடத்த முடியாது. நமது நாட்டின் அமைப்பு இதை ஏற்றுக்கொள்ளாது" என்று கூறினார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு எக்ஸ் மூலம் விமர்சித்த பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, "ராகுல் காந்தி மீண்டும் ஒருமுறை பிரச்சாரத் தலைவர் போல வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகத்தைத் தாக்குகிறார். அவர் இந்திய தேசத்துடன் சண்டையிட விரும்புகிறார்" என்று குற்றம் சாட்டினார். 

Tags:    

Similar News