உலகம்
பெட்ரோல் ஏற்றிச்சென்ற கப்பல்

இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் இலங்கை சென்றடைந்தது

Published On 2022-05-24 00:47 GMT   |   Update On 2022-05-24 00:47 GMT
இலங்கைக்கு ஏற்கனவே பல தவணைகளாக பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பிவைத்தது. கடந்த 21-ம் தேதி 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா வழங்கியுள்ளது.
கொழும்பு:

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. 

இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது.

இதற்கிடையே, கடந்த 18-ம் தேதி முதற்கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அரிசி, பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன. அவை இலங்கையை சென்றடைந்தன. நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. 

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த மக்கள் பெட்ரோல் நிலையங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தியா மேலும் 40 ஆயிரம் டன் பெட்ரோலை கப்பல் மூலம் அனுப்பிவைத்தது. அந்த கப்பல், நேற்று கொழும்பு சென்றடைந்ததாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்தியாவசியம் அல்லாத பணியாளர்கள் வீட்டிலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News