உலகம்
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள்

உக்ரைனில் இருந்து நாடு திரும்ப குறைந்த கட்டணத்தில் விமான சேவை வேண்டும்- அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை

Published On 2022-02-22 15:25 GMT   |   Update On 2022-02-22 15:25 GMT
அதிக டிக்கெட் கட்டணம், குறைந்த இருக்கைகள் காரணமாக அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை என்று மாணவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே உக்ரைன் நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி  இந்திய தூதரகம் தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்கள் இந்தியா திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதில் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த ராஜஸ்தான் ஜவாவத் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் லோகேஷ் மீனா, ராஜ்குமார் மீனா மற்றும் லக்ஷ்யா ரஜாவத் ஆகியோர் இந்தியா திரும்பினர்.

பின் உக்ரைனின் பதற்றமான சூழல் குறித்து மாணவர்கள் கூறியதாவது:-

உக்ரைனில் சுற்றிலும் ராணுவ வீரர்கள் இருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. நாங்கள் உக்ரைனில் இருக்கும்போது எங்கள் குடும்பத்தினர் இங்கு பதற்றத்தில் இருந்தனர். அதனால் எங்களை முடிந்த வழியில் திரும்பி வருமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் நாங்கள் நாடு திரும்பினோம். இருப்பினும் எங்களை போல் நிறைய மாணவர்கள் நாடு திரும்ப காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அதிக டிக்கெட் கட்டணம், குறைந்த இருக்கைகள் காரணமாக அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. சாதாரண கட்டணத்தைவிட நான்கு மடங்கு அதிக விலை கொண்ட டிக்கெட்டுகளை அவர்களால் வாங்க முடியாது. உக்ரைனில் இருந்து இந்தியா திரும்ப ரூ.23,000க்கு பதிலாக ரூ.62,000 செலவாகிறது. எனவே விமான கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழல் உள்ளது.

மற்ற மாணவர்களும் நாடு திரும்பும் வகையில், குறைந்த கட்டணத்தில் கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்.. 5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பு
Tags:    

Similar News