உலகம்
உலக சாதனை படைத்த மின்னல்

உலக சாதனை படைத்த மின்னல் பதிவு - ஐ.நா.சபை.தகவல்

Published On 2022-02-01 08:41 IST   |   Update On 2022-02-01 08:41:00 IST
இந்த மின்னலின் தூரம்,லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரை உள்ள தூரத்திற்கு சமமானது என அளவிடப்பட்டுள்ளது.
ஜெனிவா:

கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

இது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரை உள்ள தூரத்திற்கு சமமானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 2018 அக்டோபர்  31ம் தேதியன்று தெற்கு பிரேசில் பகுதியில் பதிவான ஒரு மின்னலின் தூரத்தை விட 60 கிலோமீட்டர்கள் அதிகமாக அமெரிக்க மின்னல் பதிவாகி உள்ளது.  இது இயற்கை நிகழ்வுகளின் அசாதாரண பதிவுகள் என ஐ.நா.வானிலை மற்றும் கால நிலை அதிகாரி ராண்டால் செர்வெனி தெரிவித்துள்ளார். 

மின்னலின் நீளம் மற்றும் கால அளவைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் சமீபத்திய ஆண்டுகளில் வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News