செய்திகள்
கோப்புப் படம்

ஈகுவடார் சிறையில் கலவரம் - 52 பேர் பலி

Published On 2021-11-13 19:48 GMT   |   Update On 2021-11-13 19:48 GMT
குற்ற வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்படும் போதை பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அடிக்கடி கோஷ்டி மோதல்களில் ஈடுபடுகின்றனர்.‌
குயிட்டோ :

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமான சூழலில் இருந்து வருகிறது. அங்கு மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும் என்கிற சூழலில் அதைவிட அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது சிறைகளில் பல்வேறு பிரச்சினைக்கு வித்திடுகிறது.

குற்ற வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்படும் போதை பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தனிதனி குழுக்களாக பிரிந்து அடிக்கடி கோஷ்டி மோதல்களில் ஈடுபடுகின்றனர்.‌ ஆயிரக்கணக்கான சிறை கைதிகளை கண்காணிக்க குறைவான காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இதனால் அங்கு பல சிறைகளில் சிறை அதிகாரிகளை விட கைதிகளின் கையே ஓங்கியுள்ளது.

எனவே, ஈகுவடார் சிறைகளில் அடிக்கடி கலவரம், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து ஏராளமான உயிர் பலிகள் ஏற்படுகின்றன. இதனால் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் அவசர நிலையை அந்நாட்டு அதிபர் பிரகடனப்படுத்தினார். ஆனாலும் சிறைகளில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததால் உயிர் பலிகள் தொடர்கின்றன.

இந்நிலையில், ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் சிறையில் நேற்று முன்தினம் இருதரப்பு கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.

கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் சிறை வளாகம் கலவர பூமியாக காட்சி அளித்தது.

இந்த கலவரத்தில் 52 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ஈகுவடாரில் ஒரே நாளில் 3 சிறைகளில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 79 கைதிகள் கொன்று குவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Tags:    

Similar News