செய்திகள்
சிகிச்சையை விளக்கும் மருத்துவர்

அதிரும் அமெரிக்கா - கொரோனா தொற்றால் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு

Published On 2020-11-28 19:42 GMT   |   Update On 2020-11-28 19:42 GMT
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அமெரிக்காவில் பாதிக்கப்படுபவர்களில் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழக்கின்றனர்.
வாஷிங்டன்:

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இதில், உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1.3 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு 114 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களில் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் என்ற விகிதத்தில் உயிரிழக்கின்றனர்.

அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால், டிசம்பர் மத்தியில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து செல்லும் என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.

இதேபோல், அமெரிக்காவில் வரும் 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்புகளால் 5 லட்சத்து 11 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடுமுறை கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஒன்று கூடுவோரால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News