செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி முழுபலன் அளிக்காமல் போகலாம்- கேட் பிங்க்காம் சொல்கிறார்

Published On 2020-10-28 07:32 GMT   |   Update On 2020-10-28 07:32 GMT
முதல் முயற்சியில் வெளியாகும் கொரோனா தடுப்பூசி முழு பலன்களை அளிக்காமல் போகலாம் என்று இங்கிலாந்து நாட்டின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் கேட் பிங்க்காம் தெரிவித்துள்ளார்.

லண்டன்:

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இங்கிலாந்து நாடு தற்போது முன்னணியில் இருக்கிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா செனக்கா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்ட தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என்றும் இளைஞர்கள், வயதானவர்கள் இடையே எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மீது உலக நாடுகளின் பார்வை திரும்பி இருக்கிறது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே ஆக்ஸ்போர்டு தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் உள்ள பிரபல ஆஸ்பத்திரி ஒன்று தடுப்பூசியை தயாரிக்க ஆர்டர் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முதல் முயற்சியில் வெளியாகும் கொரோனா தடுப்பூசி முழு பலன்களை அளிக்காமல் போகலாம் என்று இங்கிலாந்து நாட்டின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் கேட் பிங்க்காம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

முதல் தலைமுறை (முதல் முயற்சி) கொரோனா தடுப்பூசி முழுமையான பயனை அளிக்காமல் போகலாம். அனைவருக்கும் தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம். நம்மிடம் எப்போதும் ஒரு தடுப்பூசி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அதிக நம்பிக்கை, மன நிறைவை விட தடுப்பூசியில் பாதுகாப்பு தான் முக்கியம். அவை தொற்று நோயை தடுக்காமல் போகலாம். அறிகுறிகளை குறைத்தாலும் அனைவருக்கும் வேலை செய்யாமல் கூட போக வாய்ப்பு உள்ளது.

எனவே அதற்கு ஏற்றார் போல் நாம் தயாராக இருக்க வேண்டும். தடுப்பூசிகளில் பல மற்றும் அனைத்தும் தோல்வி அடையக்கூட வாய்ப்பு உள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் தடுப்பூசிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதற்கிடையே தற்போது இங்கிலாந்தில் மீண்டும் வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News