செய்திகள்
கோப்புப்படம்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இங்கிலாந்தில் 3 அடுக்கு ஊரடங்கு அமல்

Published On 2020-10-13 18:55 GMT   |   Update On 2020-10-13 18:55 GMT
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த 3 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக அந்த நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

இதனால் இங்கிலாந்தில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் தற்போதைக்கு முழு ஊரடங்கு இல்லை என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெளிவுபடுத்தியுள்ளார். அதே சமயம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 3 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நடுத்தரம், அதிக அளவு, மிக அதிக அளவு என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு ஏற்றார்போல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நடுத்தர அளவு பகுதிகளில் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்ய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிக அளவு பிரிவில் திருமண நிகழ்ச்சி, இறுதி சடங்கு உள்ளிட்டவற்றில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மிக அதிக அளவு பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீடுகளில் விருந்தினர்களை தங்க வைக்கவோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் 6 மாத காலத்துக்கு அமலில் இருக்குமென்றும் 28 நாட்களுக்கு ஒரு முறை விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News