செய்திகள்
வங்கி லாக்கர்

கருப்பு பணம்: இந்தியாவிடம் 2-வது பட்டியலை வழங்கியது சுவிஸ்

Published On 2020-10-09 12:37 GMT   |   Update On 2020-10-09 12:37 GMT
கருப்பு பணம் குறித்த இரண்டாவது பட்டியலை தானாக முன்வந்து வழங்குதல் ஒப்பந்தத்தின்படி சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவிடம் வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை சுவிஸ் அரசு வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப்பணத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கையில், இது முக்கிய மைல்கல்லாகும். சுவிட்சர்லாந்தின் மத்திய வரி நிர்வாகம் (எப்.டி.ஏ.), கருப்பு பணம் குறித்த விவரங்களை மேலும் 85 நாடுகளுக்கும் வழங்கியுள்ளது.

கருப்பு பணம் குறித்த முதல் பட்டியலை கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுவிஸ் அரசிடம் இருந்து இந்தியா பெற்றிருந்தது. அப்போது 75 நாடுகள், தங்கள் நாட்டு மக்களின் கருப்பு பணம் குறித்த விவரங்களை பெற்றிருந்தன. இன்று பெறப்பட்ட விவரங்களில் 31 லட்சம் நிதி கணக்குகள் குறித்த விவரம் உள்ளது. இதே அளவு விவரங்கள் கடந்த 2019-ம் ஆண்டும் இருந்தது.

எப்.டி.ஏ. வெளியிட்ட அறிக்கையில், கருப்பு பணம் குறித்து வழங்கப்பட்ட பட்டியலில் இந்தியாவின் பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், இந்த அமைப்பு வழங்கிய விவரங்களில் இந்தியர்களின் விவரங்களை பெற்றுள்ளதாக, பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திடம் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News