செய்திகள்
அமீரக துணை பிரதமருடன் இந்திய பிரதமரின் சிறப்பு பிரதிநிதி சந்திப்பு

அமீரக துணை பிரதமருடன் இந்திய பிரதமரின் சிறப்பு பிரதிநிதி சந்திப்பு

Published On 2020-09-11 03:24 GMT   |   Update On 2020-09-11 03:24 GMT
அபுதாபியில் அமீரக துணை பிரதமர் ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யானை இந்திய பிரதமரின் ஜி7 மற்றும் ஜி20 உச்சிமாநாட்டுக்கான அரசு சிறப்பு பிரதிநிதி சுரேஷ் பிரபு நேற்று சந்தித்து பேசினார்.
அபுதாபி:

அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய 2 நாடுகளுக்கு இடையே சிறப்பான நல்லுறவு இருந்து வருகிறது. இந்த நிலையில் அபுதாபி கசர் அல் வதன் அரண்மனையில் அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யானை இந்திய பிரதமரின் ஜி7 மற்றும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான அரசு சிறப்பு பிரதிநிதி சுரேஷ் பிரபு நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் உறவுகள் குறித்தும், இந்த உறவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. மேலும் பொருளாதார ஒத்துழைப்பை அனைத்து துறைகளிலும் அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் இரு நட்பு நாடுகளுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா, அமீரகம் ஆகிய 2 நாடுகளும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் 20 மற்றும் 21 ஆகிய 2 நாட்கள் சவுதி அரேபியாவில் ஜி20 உச்சிமாநாடு நடக்க இருக்கிறது.

இந்த மாநாட்டில் இரு நாடுகளின் பங்கு குறித்தும், அதில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இருந்து வரும் சூழ்நிலையில் பொருளாதார பாதிப்பு கடுமையாக இருந்து வருகிறது.

இதனை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிப்பது என பல விஷயங்கள் பேசப்பட்டது. இதன் மூலம் உலக பொருளாதாரம் மேம்படுவதற்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த மாநாடு முக்கியத்துவமாக விளங்கும்.

ஜி20 உச்சிமாநாடு நடக்க இருக்கும் சூழ்நிலையில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு வளைகுடா பகுதியில் முக்கியத்துவம் பெறுகிறது.
Tags:    

Similar News