செய்திகள்
பெண் ஒருவர் பஸ்சை இயக்கிய காட்சி.

துபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்

Published On 2020-07-07 13:37 GMT   |   Update On 2020-07-07 13:37 GMT
துபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
துபாய்:

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் அரசு போக்குவரத்து ஏஜென்சியின் பொது இயக்குனர் அகமது காசிம் பக்ரூசியான் கூறியதாவது:-

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் போக்குவரத்து சேவையில் பல்வேறு வகையான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெண் பஸ் டிரைவர்கள் கடந்த 3-ந் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். முதல் முறையாக 3 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பகுதியில் முதல் முறையாக துபாய் நகரில் பெண் பஸ் டிரைவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சிறப்பான முறையில் தங்களது பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் போதிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பாதுகாப்பான வகையில் தங்களது பணிகளை அவர்கள் மேற்கொள்ள உதவியாக இருந்து வருகிறது. பெண்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வழித்தடம் எண் 77 பனியாஸ் முதல் தேரா சிட்டி சென்டர் வழியாக துபாய் சர்வதேச விமான நிலையம் முனையம் எண் 1 மற்றும் 3 ஆகியவற்றுக்கும், வழித்தடம் எண் எப் 36 மால் ஆப் தி எமிரேட்ஸ் முதல் துபாய் அறிவியல் பூங்கா வழியாக தெற்கு அல் பர்சா வரையிலும், வழித்தடம் எண் எப்70 பர்ஜுமான் மெட்ரோ நிலையம் முதல் பர்துபாய், அல் பகிதி வழியாக மீண்டும் பர்ஜுமான் வரையிலும் இயக்கப்படும் பஸ்களில் இந்த 3 பெண் டிரைவர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

ஏற்கனவே துபாய் நகரில் பெண்கள் டாக்சிகளை இயக்கி வருகின்றனர். இந்த டாக்சிகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்வதற்கு உதவியாக இருக்கிறது. மொத்தம் 165 பெண் டிரைவர்கள் ஆணையத்தில் உள்ள டாக்சிகளில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் 41 பெண் டிரைவர்கள் ஆடம்பர சொகுசு கார்களிலும், 1 பெண் டிரைவர் பள்ளிக்கூட போக்குவரத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News