செய்திகள்
துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன்

துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்குள் மோதல் - 20 பேர் பலி

Published On 2020-04-21 22:00 GMT   |   Update On 2020-04-21 22:00 GMT
சிரியாவில் செயல்பட்டு வரும் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கிளர்ச்சியாளர் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது. 

ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை துருக்கி அளித்து வருகிறது. மேலும், தங்கள் நாட்டு படைகளை சிரியாவுக்குள் துருக்கி அரசு நிலைநிறுத்தியுள்ளது. இதனால் அங்கு தினமும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.



இதற்கிடையில், துருக்கி படைகள் சிரியாவுக்குள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ஹசஹா மாகாணமும் ஒன்றாகும். அந்த மாகாணத்தில் உள்ள குர்திஷ் மக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் துருக்கி படையினரும், அதன் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹசஹா மாகாணம் ரஷ் அல் அன் நகரில் செயல்பட்டு வந்த துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களின் இரண்டு குழுக்களுக்கு இடையே நேற்று கருத்து வேறுபாடு காரணமாக திடீரென மோதல் வெடித்தது. 

இதனால் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு சண்டையில் ஈடுபட்டனர். இந்த மோதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், பல கிளர்ச்சியாளர்கள் படுகாயமடைந்திருப்பதாக சிரியா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News