செய்திகள்

3 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்

Published On 2019-03-27 05:54 GMT   |   Update On 2019-03-27 06:46 GMT
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார். #NawazSharif #NawazBail #PMLNLeader
லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு (வயது 69), அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதனை சுட்டிக்காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நவாஸ் ஷெரீப்புக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்கினர். பாகிஸ்தானுக்குள் எந்த பகுதியிலும் மருத்துவ சிகிச்சை பெறலாம், ஆனால், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜாமீன் உத்தரவு லாகூர் சிறை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. சிறை நடைமுறைகள் முடிந்து நவாஸ் ஷெரீப் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். 3 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு அவர் வெளியே வந்தார். அவரை வரவேற்க சிறை வாசல் முன்பு ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். நவாஸ் காரில் புறப்பட்டுச் சென்றபோது பூக்களை தூவி வரவேற்றனர்.



சில தொண்டர்கள் நவாஸ் ஷெரீப்பின் கார் அவரது இல்லத்தை அடையும் வரை பின்தொடர்ந்து சென்றனர். வீட்டில் குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் நவாஸை வரவேற்றனர். அவர் விரைவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NawazSharif #NawazBail #PMLNLeader

Tags:    

Similar News