செய்திகள்

அபிநந்தன் விடுதலைக்கு அமெரிக்கா, சீனா வரவேற்பு

Published On 2019-03-01 21:33 GMT   |   Update On 2019-03-01 21:33 GMT
அபிநந்தன் விடுதலைக்கு அமெரிக்கா, சீனா வரவேற்பு தெரிவித்துள்ளன. பயங்கர வாதிகளுக்கு நிதி உதவியை தடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. #AbhinandanReturn
வாஷிங்டன்:

அபிநந்தன் விடுதலைக்கு அமெரிக்கா, சீனா வரவேற்பு தெரிவித்துள்ளன. பயங்கர வாதிகளுக்கு நிதி உதவியை தடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-

இந்திய விமானியை விடுவித்த முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில், பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் வலியுறுத்துகிறோம். நேரடியாக பேசுங்கள். ராணுவ நடவடிக்கையானது, நிலைமையை மோசமாக்கவே செய்யும். மேலும், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என்றும், அவர்களுக்கு நிதிஉதவியை தடுப்போம் என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுமாறு பாகிஸ்தானை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் கூறியதாவது:-

பொறுமையை கடைபிடிக்க வேண்டும், பதற்றத்தை தணிக்க வேண்டும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே சீனா வலியுறுத்தி வருகிறது. இந்த நேரத்தில், பாகிஸ்தான் எடுத்த நல்லெண்ண நடவடிக்கையை வரவேற்கிறோம். பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவதற்கான சூழ்நிலையை இரு நாடுகளும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #AbhinandanReturn
Tags:    

Similar News